முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? டாக்டர் ராமதாஸ் - மு.க. ஸ்டாலின் ட்விட்டர் யுத்தம்

சென்னை

நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நடிகர் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை இரு தினங்களுக்கு முன் பார்த்தனர்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அசுரன் படம் மட்டும் அல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்," எனப் பதிவிட்டார்.


ஸ்டாலின் கருத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா, அற்புதம். அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!," எனப் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

ஸ்டாலின் தன்னுடைய பதிவில், "ராமதாஸ், தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் பொய் சொல்லியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?," என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தன் பதிவுடன் முரசொலி அலுவலகத்துக்கான நில அளவீடு செய்து வழங்கப்பட்ட சான்றிதழுக்கான ஆதாரத்தையும் ஸ்டாலின் இணைத்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டாலின் பதிலுக்கு பதிலடி கொடுத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது;

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை! என கூறி உள்ளார்.

Google+ Linkedin Youtube