தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; ரஹானே சதம் விளாசல்

ராஞ்சி,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.  மயங்க் அகர்வால் (10 ரன்) ஸ்லிப்பில் நின்ற டீன் எல்கரிடம் பிடிபட்டார். அடுத்து வந்த புஜாரா (0) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முந்தைய டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி (12 ரன், 22 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின் ரோகித் சர்மா மற்றும் அஜிங்கியா ரஹானே இணைந்து அணிக்கு அதிக ரன்களை சேர்த்தனர்.  இதனால் ஆட்ட நேர முடிவில் 58 ஓவர்களில் இந்திய அணி 224 ரன்களை எடுத்திருந்தது.  ரோகித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  இதில், நார்ஜே வீசிய 69வது ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஒரு ரன் எடுத்து சதம் பூர்த்தி செய்துள்ளார்.  2016ம் ஆண்டுக்கு பின்பு இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் முதல் சதம் இதுவாகும்.  டெஸ்ட் போட்டிகளில் அவரது 11வது சதம் ஆகும்.

இதேபோன்று லிண்டே வீசிய 70வது ஓவரின் 3வது பந்தில் ரோகித் சர்மா 150 ரன்களை கடந்துள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களை 3வது முறையாக அவர் எடுத்துள்ளார்.

பின்பு 75.3வது ஓவரில் லிண்டே வீசிய பந்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 115 (192 பந்துகள், 17 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர்) வெளியேறினார்.  தொடர்ந்து 77வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 307 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Google+ Linkedin Youtube