வங்காளதேச மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு -16 பேருக்கு மரண தண்டனை

டாக்கா,

வங்காளதேசத்தில் 19-வயது மாணவி  தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு தெரிவித்து  நஸ்ரத் ஜஹான் நபி என்ற அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து வகுப்பறையிலிருந்து மாணவியை கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்ற சிலர் அவரை பாலியல் புகாரை வாபஸ் வாங்கும்படி அழுத்தம் கொடுத்தனர். ஆனால், அந்த மாணவி மறுத்ததால்,  உயிரோடு தீ வைத்து எரித்தனர். இதில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த, மாணவி ஐந்து நாட்கள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

இந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.  போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ''சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக'' பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருந்தார். 

மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம்  தொடர்பாக 18 பேர் கைது  செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்,  குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

வங்காளதேசத்தை பொறுத்தவரை, இதுபோன்ற வழக்குகள் நடந்து முடிவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், மாணவி மரணம் தொடர்பான வழக்கின் தீவிரம் காரணமாக ஆறே மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டு  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube