குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியாரே, ‘ஆக்‌ஷன் ஹீரோ’வான ரஜினிகாந்த் ஏறக்குறைய எல்லா படங்களிலும் சண்டை காட்சிகளில் நடித்து இருப்பார். அவருடைய படங்களில், சண்டை காட்சிகளே இல்லாத படம் எது? (பி.விஜயராஜ், சென்னை–87)

ரஜினிகாந்த் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் சண்டை காட்சிகள் கிடையாது. அவர் நடித்த பக்தி படமான ‘ராகவேந்திரா’விலும் சண்டை காட்சிகள் இல்லை. நகைச்சுவை படமான ‘தில்லுமுல்லு’விலும் சண்டை காட்சி இல்லை!

***

சிவகார்த்திகேயனுக்கு ராசியான கதாநாயகி மற்றும் பொருத்தமான ஜோடி யார்? (கே.ஆர்.வத்சலா, ஸ்ரீரங்கம்)

ராசியான நாயகி மற்றும் பொருத்தமான ஜோடி, ஸ்ரீதிவ்யாதான்!

***

குருவியாரே, பெரும்பாலும் எல்லா கதாநாயகிகளும் நடிப்பு ஒன்றை தவிர வேறு எதுவும் தெரியாத அப்பாவிகளாகவே இருப்பார்கள். எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு, அய்யோ பாவமாக தெரிவார்கள். அதனால் அவர்கள் சுலபமாக ஏமாந்தும் விடுகிறார்கள். அவர்கள் தெளிவதற்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? (ஆர்.சுரேந்திரன், கரூர்)

பெரும்பாலான கதாநாயகிகள் அப்பாவிகளாக இருந்தது, ஒரு காலம்., ஏமாந்தது எல்லாம் அந்த காலம். இப்போது வருகிற கதாநாயகிகள் மிக தெளிவாக இருக்கிறார்கள். இவர்களை ஏமாற்றுவது சுலபம் அல்ல. இதற்கெல்லாம் சங்கம் தலையிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, முறையல்ல!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் சிறந்த நடிப்பில் வெளிவந்த ‘வியட்நாம் வீடு,’ ‘ராமன் எத்தனை ராமனடி’ போன்ற படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் வெளிவருமா? (கே.சி.பிரசன்னகுமார், கோவில்பட்டி)

உங்களின் நல்ல ரசனைக்காகவே அந்த 2 படங்களும் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராவதற்கான வேலைகள் நடக்கின்றன.!

***

குருவியாரே, யோகி பாபுவின் சொந்த ஊர் எது? அவருக்கு பெண் பார்த்து வந்தார்களே...பெண் உறுதியாகி விட்டாரா? (ஏ.ஜான்சன், நாகர்கோவில்)

யோகிபாபு, சென்னையை அடுத்த ‘நசரத்பேட்டையை சேர்ந்தவர். அவருக்கு பெண் பார்ப்பது உண்மை. மணப்பெண் இன்னும் உறுதி செய்யப்படவில்லை!

***

காஜல் அகர்வால் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்கிறார்களே...அப்படியா? (வ.கவுதம், புதுச்சேரி)

அவருடைய முகப்பூச்சையையும், உடைகளையும் பார்த்து அப்படி தவறாக சொல்கிறார்கள். காஜல் அகர்வால் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. நடுத்தர வகுப்பு. உடை வி‌ஷயத்தில் அவர் மிகவும் கவனம் செலுத்துகிறார். அவர் அதிக செலவு செய்வது, உடைகளுக்காகவே!

***

குருவியாரே, வடிவேல், சந்தானம் ஆகிய இருவரும் விட்டு சென்ற காலியான இடத்தை நிரப்பப் போவது யார்? (மா.வெங்கடேஷ், திருச்சி)

சூரி, அதற்கு முயற்சித்து வருகிறார். சதீஷ், கருணாகரன் ஆகிய இருவருமே ‘கிச்சுகிச்சு’ செய்தால் கூட சிரிப்பு வருவதில்லை. அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. யோகிபாபு வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. அவரால் முடிந்ததை (வசன காமெடி) செய்து வருகிறார்!

***

அம்மா வேடத்துக்கு வந்து விட்ட பெரும்பாலான முன்னாள் கதாநாயகிகளில், அதிக படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் யார்? (ரா.சசிகுமார், வாலாஜாப்பேட்டை)

சரண்யா பொன்வண்ணன்! இந்நாள் கதாநாயகிகள் கைவசம் இருப்பதை விட, அதிக படங்களை கையில் வைத்து இருப்பவர், சரண்யாதான்!

***

குருவியாரே, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக பிரகாசிக்கிறாரா அல்லது நடிகராக பிரகாசிக்கிறாரா? (டி.துரை, நெகமம்)

 இரண்டிலுமே அவர் பிரகாசிப்பதால்தான் இசையமைப்புக்கும், நடிப்புக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாம்!

 ***

ஆர்யா வீட்டில் விசே‌ஷம் எதுவும் உண்டா? (கே.ரவி, ஊட்டி)

இன்னும் இல்லையாம். கணவர்–மனைவி இருவருமே தொடர்ந்து நடிப்பதில் விருப்பமாக இருப்பதால், இப்போதைக்கு ‘விசே‌ஷம்’ எதுவும் இல்லையாம்!

***

குருவியாரே, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் ஆகிய இருவரில் அதிக படங்களை கைப்பற்றியிருப்பவர், யார்? (எம்.ரகமத்துல்லா, தேனி)

மகிமா நம்பியார் மலையாளத்திலும், ரம்யா நம்பீசன் தமிழிலும் அதிக படங்களை கைப்பற்றி இருக்கிறார்கள்!

***

‘நெடுஞ்சாலை’ படம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூல் செய்ததால், அந்த படத்தின் கதாநாயகி சிவதாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தோம்...அது நடக்கவில்லையே...? (எம்.சி.ஞானசேகரன், வேலூர்)

சிவதா, மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு தமிழ் படங்கள் இரண்டாம் பட்சம்தான்!

***

குருவியாரே, விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துக்கொண்டே மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், கவுரவ வேடங்களிலும் நடிப்பது ஏன்? (ஆர்.ஜெகன், உளுந்தூர்பேட்டை)

ஒரு நல்ல நடிகர், குறுகிய வட்டத்துக்குள் நிற்கக்கூடாது என்பதில் மாறாத நம்பிக்கை கொண்டவர், விஜய்சேதுபதி! அதனால்தான் வில்லன், குணச்சித்ரம், நட்புக்காக...என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்!

***

ஜீவா எத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்? அவர் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? (ஜே.ஆபிரகாம் லிங்கன், கடலூர்)

ஒரு ஆங்கில படம் உள்பட 4 புதிய படங்களில் ஜீவா நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘செக்சி!’

***

குருவியாரே, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (ஆர்.ஆனந்த், வல்லக்கோட்டை)

‘ஜெயம்’ படத்தில் ஆரம்பித்து, ‘கோமாளி’ வரை ஜெயம் ரவி 29 படங்களில் நடித்து இருக்கிறார். (இதில், பிற மொழி படங்களும் உள்ளன.)

***

சிம்பு அரசியலுக்கு வருவாரா? (என்.மோகன், கோவை)

நிச்சயமாக சிம்பு அரசியலுக்கு வருவார்! எப்போது என்பதை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்கள்!

***

சசிகுமார் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? (சூலூர் மோகன், காமநாயக்கன்பாளையம்)

சசிகுமார் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘கொம்பு வச்ச சிங்கம்டா!

***

Google+ Linkedin Youtube