மும்பை ஓட்டலில் 162 எம்.பி.க்கள் ஓரணியாக நின்று உறுதிமொழி எடுத்தனர்

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 23ந்தேதி மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.  இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு  ஏற்பட்டது.

இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கவர்னர்  மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும்  சமர்ப்பித்துள்ளனர்.  சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் ஆதரவு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாஜ்வாதி கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று இந்த எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்துகின்றனர்.

இதற்காக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 162 எம்.பி.க்களும் உறுதிமொழி ஒன்றை எடுத்து கொண்டனர்.

இதன்படி அவர்கள், சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி தலைமையின் கீழ், என்னுடைய கட்சிக்கு நான் நேர்மையாக இருப்பேன்.  யாராலும் இழுக்கப்படமாட்டேன்.  பா.ஜ.க. பலன் அடையும் எதனையும் நான் செய்யமாட்டேன் என உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்து உள்ளனர்.

Google+ Linkedin Youtube