இத்தாலி கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி

ரோம்,

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். அவ்வாறு கடல் மார்க்கமாக தப்பிச் செல்பவர்கள் இத்தாலி நாட்டின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர்.

இப்படி கடல் வழியாக தப்பிச் செல்பவர்கள் ரப்பர் படகுகளிலும், சிறிய கப்பல்களிலும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அவ்வாறு நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று இத்தாலி கடற்கரை அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 149 பேரை இத்தாலி நாட்டின் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்கள் உட்பட 5 பேர்களின் உடல்கள் நேற்று கரை ஒதுங்கியது. மேலும் 20 பேரை காணவில்லை என  உயிர்பிழைத்தவர்கள் கூறியதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Google+ Linkedin Youtube