நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா 2019 நிறைவேறியது; காங்கிரஸ் வெளிநடப்பு

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா 2019 நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  இதன் மீது இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசும்பொழுது, சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த திருத்தத்திற்கு பின்பு, இச்சட்டத்தின்படி, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு ஆனது பிரதமர் மற்றும் அவரது இல்லத்தில் அதிகாரப்பூர்வ முறையில் அவருடன் வசித்து வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறினார்.

இதேபோன்று அரசு ஒதுக்கீடு செய்த இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் 5 ஆண்டுகள் வரை இந்த சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் (கருப்பு பூனைப்படை) பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.  இதன்பின்பு, முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கிய இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.  இதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (கருப்பு பூனைப்படை) பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.  இதற்கு பதிலாக அவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பிரிவின் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து அமித்ஷா பேசும்பொழுது, காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு பற்றி அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் அதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது என்றும் ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தும் முயற்சி நடந்தது.

அவர்களின் பாதுகாப்பு திரும்ப பெறப்படவில்லை.  அச்சுறுத்தலை ஆய்வு செய்து அதனடிப்படையில் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

இதற்கு முன்பு இந்த மசோதாவானது ஒரு குடும்பம் பற்றி கவனத்தில் கொண்டே மாற்றம் செய்யப்பட்டது என கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை.  ஆனால், முதன்முறையாக பிரதமரின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு இந்த மசோதா திருத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.  எனினும், காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Google+ Linkedin Youtube