டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை: மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது;உத்தவ் தாக்கரே

மும்பை,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்து சென்று தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதலை எனக்கு நினைவுபடுத்துகிறது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். நாட்டில் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணருகிறார்கள். குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களை டெல்லி போலீசார் கண்டுபிடிக்க தவறினால் அவர்களும் கோர்ட்டு கூண்டில் நிற்பார்கள். மராட்டியத்தில் இதுபோன்ற சம்பவத்தை அனுமதிக்க மாட்டோம். இங்கு மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாணவர்களை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஊக்கப்படுத்த மாட்டேன். டெல்லி சம்பவத்தை கண்டித்து மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோபம் எனக்கு புரிகிறது.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். மற்றொரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். இது நல்ல அறிகுறி அல்ல. மாணவர்கள் பாதுகாப்பாக இருக்காவிட்டால் நாடு பாதுகாப்பாக இருக்காது.டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு எதிராக ஒரு மாணவர் சங்கம் வெறுப்பைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். இதுபோன்ற அமைதியின்மைக்கு மத்தியில் அரசாங்கத்தில் உள்ளவர்கள், குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர்” என்றார்.

Google+ Linkedin Youtube