டெல்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வேட்பாளர்களின் 2வது பட்டியல் வெளியீடு

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

இதனைத்தொடர்ந்து, அங்கு ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் 57 தொகுதிகளில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. கடந்த 17ந்தேதி வெளியிட்டது.

இதன்படி மாடல் டவுன் தொகுதியில் கபில் மிஷ்ராவும், ரோகிணி தொகுதியில் விஜேந்தர் குப்தாவும், ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தாவும், சாந்தினி சவுக் தொகுதியில் சுமன் குமார் குப்தாவும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.  இதனிடையே, டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியலை பா.ஜ.க. நேற்றிரவு வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புதுடெல்லி தொகுதியில் இருந்து டெல்லி யுவ மோர்ச்சா தலைவர் சுனில் யாதவ் நிறுத்தப்பட்டு உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முடிவை எடுத்த சிரோமணி அகாலி தளம் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடவில்லை.  இதனால் முந்தைய தேர்தல்களில் அக்கட்சிக்கு வழங்கி வந்த 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் கல்காஜி தொகுதியில் இருந்து தரம்வீர் சிங், ஷாதரா தொகுதியில் இருந்து கிழக்கு டெல்லி முன்னாள் துணை மேயர் சஞ்சய் கோயல் மற்றும் ரஜோரி கார்டன் தொகுதியில் இருந்து ரமேஷ் கன்மா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

3 தொகுதிகளை கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு பா.ஜ.க. ஒதுக்கீடு செய்துள்ளது.


Google+ Linkedin Youtube