சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்தது: புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் 31 மாகாணங்களில் வேகமாக பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் உயிர் பலி ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் 250 பேர் உயிரிழந்ததால் பெரும் பீதி நிலவியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்தது. தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதற்கிடையே சீனாவில் நேற்று கொரோனா வைரசுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அங்கு 10 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உகான் நகரைச் சேர்ந்தவர்கள். இங்குதான் கொரோனா வைரஸ் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மொத்தம் இதுவரை 3,199 பேர் பலியாகி உள்ளனர். 8,824 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 66,911 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஸ்’ செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் உள்ளூர்வாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 

Google+ Linkedin Youtube