ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் அதிகரிப்பு

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர இம்மாதம் முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மத்திய ரயில்வேயில் நடைமேடைகளுக்கன டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத், ராஜ்காட் உட்பட 6 கோட்டங்களில் உள்ள 250 நடைமேடைகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய ரெயில்வேவை தொடர்ந்து கொரோனா எதிரொலியால் மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வேயும் தெரிவித்துள்ளது. நடைமேடை கட்டண உயர்வு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் , எழும்பூர் ,தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ரெயில் நிலையங்களின் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட அனைத்து நினைவு சின்னங்களும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Google+ Linkedin Youtube