இந்தியாவில் கொரோனா பாதிப்பு 606 ஆக அதிகரித்தது

புதுடெல்லி,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.  160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமுடன் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன.

கொரோனா வைரசால் ஏற்பட்ட  உயிரிழப்பு  நேற்று 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்திற்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4ல் ஒரு பங்காக 1 லட்சத்து 8 ஆயிரத்து 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 606 ஆக அதிகரித்து உள்ளது.  இதுவரை 42 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி விட்டனர்.  நாடு முழுவதும் 10 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

நம்மையும் மற்றும் பிறரையும் பாதுகாத்து கொள்ள, அரசால் பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள், விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை நாம் பின்பற்ற வேண்டும் என அந்த அமைச்சகத்தின் மந்திரி ஹர்ச வர்தன் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube