ஆசிய கோப்பை ஆக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

டாக்கா, 


ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.


இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன் அணிகளும் இடம் பிடித்துள்ளன.


ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.


இந்தியா-ஜப்பான் மோதல்


தொடக்க நாளான இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன. அடுத்து நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் (மாலை 5.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. புதிய பயிற்சியாளர் மர்ஜினே பயிற்சியின் கீழ் இந்திய அணி சந்திக்கும் முதல் போட்டி தொடர் இதுவாகும்.


கடந்த முறை 2-வது இடம் பிடித்த இந்திய அணி மன்பிரீத்சிங் தலைமையில் இந்த போட்டியில் களம் காணுகிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 13-ந் தேதி வங்காளதேசத்தையும், 15-ந் தேதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது.


சவாலானதாகும்


போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் அளித்த பேட்டியில், ‘தொடக்க ஆட்டம் எப்பொழுதுமே சவாலானதாகும். ஏனெனில் தொடக்கத்தில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதுடன், ஆட்டத்தில் ரிதத்துக்கு வர வேண்டியது அவசியமானதாகும். இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. முதல் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம். உயர்வான தர வரிசையுடன் இந்த போட்டியில் நாங்கள் களம் இறங்குகிறோம் என்பது தெரியும். ஆசிய கண்ட தர வரிசையில் எங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்வது எங்கள் நோக்கமாகும். ஆசிய கண்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் அணிகளில் ஒன்று ஜப்பான் ஆகும். ஐப்பான் அணியை கணிப்பது கடினம். அந்த அணியை நாங்கள் ஒருபோதும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டோம்’ என்று தெரிவித்தார். 

Google+ Linkedin Youtube