காய்கறி வாங்க சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு ஸ்கூட்டரில் தப்பிய நபரை வாலிபர்கள் துரத்தி பிடித்தனர்

நாகர்கோவில்,

நாகர்கோவில் கட்டயன்விளையை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி அகிலா (வயது 40). இவர் நேற்று பகல் 12.30 மணியளவில் பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். அப்போது பார்வதிபுரத்தில் இருந்து வெட்டூர்ணிமடம் நோக்கி ஒரு ஸ்கூட்டர் வந்தது. அதை ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் அகிலாவின் அருகே வந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலா கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு நகையை பறித்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் ஸ்கூட்டரில் வேகமாக தப்பிச் சென்றார். எனினும் அங்கு நின்று கொண்டிருந்த களியங்காட்டை சேர்ந்த பாபு (20), அய்யப்பன், ராஜீவ் மற்றும் கணேஷ் ஆகிய 4 வாலிபர்களும் சேர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் அந்த மர்ம நபரை தூரத்தினர். சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் துரத்திய நிலையில் வெட்டூர்ணிமடம் அருகே சென்றதும் மர்ம நபரின் ஸ்கூட்டரை வாலிபர்கள் மடக்கினர்.

நகையை பறித்து மாட்டிக்கொண்டதால் செய்வதறியாமல் திகைத்துப்போன அந்த மர்ம நபர் உடனே தான் பறித்த நகையை வாலிபர்களிடம் ஒப்படைத்தார். பிறகு அந்த நபர் நைசாக ஸ்கூட்டரில் தப்பித்தார். ஆனால் வாலிபர்கள் அந்த மர்ம நபரை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்து சென்றனர்.

அய்யப்பன் கோவில் அருகே வைத்து வாலிபர்களிடம் அந்த மர்ம நபர் மாட்டிக்கொண்டார். நகை பறிப்பு திருடன் பிடிபட்ட தகவல் பரவியதால் ஏராளமான மக்கள் அங்கு திரண்டு மர்ம நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இதுபற்றி நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே மர்ம நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழிப்பறி திருடனை மோட்டார் சைக்கிளில் சென்று துரத்தி பிடித்த வாலிபர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட மர்ம நபர் புத்தேரி பாரதிநகரை சேர்ந்த பெருமாள் (54) என்பது தெரியவந்தது. இதற்கிடையே நகை பறிப்பு சம்பவம் நடந்த இடம் வடசேரி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதி என்பதால் பெருமாளை நேசமணி நகர் போலீசார் வடசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெருமாள், வேறு ஏதேனும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Google+ Linkedin Youtube