மலையோர பகுதிகளில் மழை: குமரியில் ரப்பர் பால்வடிப்பு தொழில் கடும் பாதிப்பு

மார்த்தாண்டம்:  குமரி  மாவட்ட மக்களின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக ரப்பர் விளங்கி வருகிறது.  உலகத்தரம் வாய்ந்த ரப்பர் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு வரை ரப்பரின் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த  நிலையில் தற்போது ரப்பர் விலை கிலோ ரூ.100, ரூ.110 என சரிந்து  விட்டது. இதனால் ரப்பர் விவசாயிகள் பல்வேறு வகைகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், தற்போது ரப்பர் ஷீட் கிலோ ரூ.112, ஒட்டுக்கறை ரூ.81 என்ற அளவில்  இருந்து வருகிறது. பொதுவாக ரப்பர் மரங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்கள் இலையுதிர் காலமாகும். இந்த காலகட்டத்தில் ரப்பர் பால் வடிப்பை நிறுத்தி  விடுவார்கள்.

 அதற்கு முந்தைய அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக  ரப்பர் பால் கிடைப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும்  அதிகாலை மற்றும் காலை நேரங்களில் திடீர் திடீரென மழை பெய்து வருகிறது.  இதனால்  பால்வடிக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. பெரிய ரப்பர் தோட்டங்களில் மழை பெய்தாலும் மரத்தில் நீர்  வடியாமல் இருக்க பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும்.  இவர்கள்  ஓரளவு கனமழை பெய்தாலும் பால்வடிப்பில் ஈடுபடுகின்றனர். சிறிய பரப்பளவிலான  தோட்டங்களில் இதுபோன்ற தடுப்புகள் வைக்கப்படுவது இல்லை. இதனால் மழை  பெய்தால் அன்றைய பால்வடிப்பு பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறது. 

Google+ Linkedin Youtube