தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் வரை தங்க பத்திரம் விற்பனை

புதுடெல்லி: தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கருத்தில் கொண்டு, தங்க பத்திரங்கள் டிசம்பர் வரை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  வீடுகள், கோயில்களில் முடங்கி கிடக்கும் தங்கத்தை வெளிக்கொண்டு வரவும், தாள்கள் வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இவற்றில் ஒன்று தங்க பத்திர திட்டம். இதை அறிமுகம் செய்தபோது, ஒரு நபர் ஆண்டுக்கு 500 கிராம் மட்டுமே முதீடு செய்யலாம் என இருந்தது. இது தற்போது 4 கிலோவாக உயர்த்தப்பட்டுளளது. இதுபோல், அறக்கட்டளை, நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யும் வரம்பு 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. 

 இந்த திட்டத்தில் இந்திய வெள்ளி மற்றும் தங்க நகை விற்பனையாளர் சங்கம் நிர்ணயித்த முந்தைய வார விலை அடிப்படையில் பத்திரத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும்.நடப்பு நிதியாண்டுக்கான 3வது தங்க பத்திர விற்பனை கடந்த 9ம் தேதி துவங்கியது. ஒரு கிராம் விலை ரூ.2,956 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்கினால் 50 ரூபாய் தள்ளுபடி உண்டு. இதை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பொரேஷன், குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் வாங்கலாம்.  வழங்கமாக பத்திரம் வெளியிடப்பட்டதில் இருந்து சில நாட்கள் மட்டுமே விற்பனை நடைபெறும். 

தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருவதை கருத்தில் கொண்டு டிசம்பர் 27ம் தேதி வரை தொடர்ந்து விற்பனை இருக்கும். ஒவ்வொரு வாரமும் முந்தைய வார அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட இருக்கிறது.    ஆனால், இதில் முதலீடு செய்பவர்கள், முழு பலனை பெற 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி வழங்கப்படும். இடையில் வெளியேறுவதாக இருந்தால் கூட, 5 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே வெளியேற முடியும். தங்க பத்திர முதலீடு பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருந்தாலும் கூட, முதலீட்டு கால அளவு அதிகமாக இருப்பதால் குறுகிய கால அடிப்படையில் லாபம் ஈட்டுபவர்கள் இதில் முதலீடு செய்ய தயங்குவார்கள் எனவு சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நகை வியாபாரிகள் மிகுந்த உற்சாகம்

சட்ட விரோத பண பரிவர்த்தனை மோசடியை தடுக்கும் வகையில், இந்த சட்ட விதிகள் தங்கம் வாங்குவதற்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் ரூ.50,000க்கு மேல் தங்கம் வாங்குவோர் பான், ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் நவராத்திரி பண்டிகைகள் வந்தபோதும் நகை விற்பனை எதிர்பார்த்த அளவு விறுவிறுப்பாக இல்லை. வருமான வரி விசாரணைக்கு பயந்து அதிக நகை வாங்குவதற்கு மக்கள் தயங்கினர். இந்த தடைகள் தற்போது நீங்கியுள்ளதால், தீபாவளிக்கு நகை விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் என வியாபாரிகள் எதிர்நோக்கியுள்ளனர். தங்க பத்திர திட்டம் இருந்தாலும், நகையாக வாங்குவதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் நகை விற்பனை அதிகரிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Google+ Linkedin Youtube