ஜூனியர் உலக கோப்பை கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்–இங்கிலாந்து இன்று மோதல்

கொல்கத்தா, 

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. கொல்கத்தாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கால்பந்தில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வரும் பிரேசில் அணிக்கு என்று அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இது அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். நடப்பு தொடரில் இதுவரை பீல்டு கோல் எதுவும் பிரேசில் விட்டுக்கொடுக்கவில்லை. மொத்தத்தில் 2 கோல்கள் மட்டுமே வாங்கி இருக்கிறது. அதாவது ஸ்பெயினுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுய கோலும், ஜெர்மனிக்கு எதிரான கால்இறுதியில் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலும் வாங்கியது. அந்த அளவுக்கு அந்த அணியின் தடுப்பு ஆட்டம் வலிமையானதாக உள்ளது. இங்கிலாந்து அணியும் இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்பதால் ஆட்டத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் இரவு 8 மணிக்கு நடக்கும் 2–வது அரைஇறுதியில் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி, ஆப்பிரிக்க சாம்பியன் மாலியுடன் மல்லுக்கட்டுகிறது.

Google+LinkedinYoutube