நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது

புனே, 

இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. இந்திய வீரர்கள் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி வீறுநடை போட்ட இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

முதலாவது ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி (121 ரன்), தினேஷ் கார்த்திக் (37 ரன்) தவிர மற்றவர்கள் ஜொலிக்கவில்லை. எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நல்ல தொடக்கம் அளிக்க வேண்டியது முக்கியமாகும்.

சுழல் தாக்கம் இருக்குமா?

கடந்த சில தொடர்களில் மிரட்டிய குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் சுழல் தாக்குதல் எடுபடாததால் இந்தியாவுக்கு பின்னடைவாகிப் போனது. நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதமும் (103 ரன்), ராஸ் டெய்லரும் (95 ரன்) சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்து விளையாடி விட்டனர். இருவரும் ஒன்று, இரண்டு வீதம் ரன்கள் எடுத்தும், ஏதுவான பந்துகளை விளாசியும் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கியதுடன், தங்கள் அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தனர். அவர்களுக்கு சுடச்சுட பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

இந்திய அணிக்கு 4–வது பேட்டிங் வரிசை தான் கவலைக்குரிய அம்சமாக தொடருகிறது. 2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு அந்த இடத்திற்கு இதுவரை 11 பேட்ஸ்மேன்களை பயன்படுத்தி பார்த்தாகி விட்டது. கடைசியாக கடந்த ஆட்டத்தில் கேதர் ஜாதவ் அந்த வரிசையில் ஆடினார். அவரும் சோபிக்கவில்லை. 4–வது வரிசைக்கு பொருத்தமான பேட்ஸ்மேனை அடையாளம் காண்பது அவசியமாகும்.

லாதம் பேட்டி

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இதுவரை இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வென்றதில்லை. கூடுதல் நம்பிக்கையுடன் தங்களை ஆயத்தப்படுத்தியுள்ள அவர்கள் இந்த ஆட்டத்திலும் வெற்றி கண்டு இந்தியாவில் முதல்முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் முனைப்புடன் காத்திருக்கிறார்கள்.

முந்தைய ஆட்டத்தின் நாயகன் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘வித்தியாசமான சூழலில் ஒவ்வொரு வீரர்களும், வெவ்வேறு விதமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வார்கள். இந்திய வீரர்களுக்கு இங்குள்ள சீதோஷ்ண நிலை பழக்கப்பட்ட ஒன்று என்பதால் அதற்கு ஏற்ப சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுகிறார்கள். என்னை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சை சிக்சர் நோக்கி தூக்கி அடிப்பதை விட ஸ்வீப் ஷாட்டே (முட்டிப்போட்டு லெக்சைடு பந்தை திருப்பி அடிப்பது) எளிது என்று கருதுகிறேன்’ என்றார்.

பரத் அருண் கருத்து

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் மும்பை ஆட்டத்தில் தடுமாறியது (இருவரும் சேர்ந்து 125 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தனர்) குறித்து கேட்கிறீர்கள். தொடர்ந்து 9 ஆட்டங்களில் வெற்றி பெற்ற போது அதில் அவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. சில நேரங்களில் நாம் வகுத்த திட்டங்களின்படி விக்கெட் கிடைக்காமல் போகத்தான் செய்யும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் அவர்கள் செயல்பட்டு வரும் விதம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நியூசிலாந்து வீரர்கள் எப்படி ‘ஸ்வீப்’, ’ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட்டுகள் அடிக்கிறார்கள் என்பதை வீடியோ காட்சியில் பார்த்தோம். இந்த முறை அவர்களுக்கு தீட்டியுள்ள திட்டங்களில் மாற்றங்களை செய்துள்ளோம். இப்போது, சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்’ என்றார். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரை டெஸ்ட் போட்டிக்கும், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ஒரு நாள் போட்டிக்கும் என்று தனித்தனியாக பயன்படுத்துவதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

மைதானம் எப்படி?

புனே ஸ்டேடியத்தில் இதுவரை 2 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. 2013–ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. கடந்த ஜனவரி மாதம் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 351 ரன்கள் இலக்கை இந்திய அணி விராட் கோலி, கேதர் ஜாதவின் செஞ்சுரிகளின் உதவியுடன் எட்டிப்பிடித்தது. அந்த வகையில் நோக்கினால், இது பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளமாக இருக்கும் என்றே தெரிகிறது.

இரு அணிகளும் வரிந்துகட்ட தயாராவதால் இன்றைய மோதலிலும் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், கிரான்ட்ஹோம், சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Google+ Linkedin Youtube