இந்திய அணி அபார வெற்றி - தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆஸ்திரேலிய அணியில் நேற்று ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கேன் ரிச்சட்சனுக்கு பதில் ஜேம்ஸ் பாக்னர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், ஆரோன் பின்சும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசியதால், ஆஸ்திரேலிய அணி, 8.1 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. இந்த ஜோடி இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்த நேரத்தில் ஆரோன் பின்ச்சின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். 36 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களைக் குவித்த பின்ச், பாண்டியாவின் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்ச் ஆட்டம் இழந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கியது. ஸ்மித் 16 ரன்களிலும், அரை சதம் எடுத்த வார்னர் 53 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கம்ப் 13 ரன்களிலும் அவுட் ஆக ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. 118 ரன்களுக்கு அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஸ்டோனிஸும், டிராவிஸ் ஹெட்டும் ஈடுபட்டனர். குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்து முற்றுகைக்கு நடுவே கடுமையாக போராடிய அவர்கள் சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி 64 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது.

40 ஓவர்களுக்கு பிறகு ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் இந்த ஜோடி பிரிந்தது. 59 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்த டிராவிஸ் ஹெட், அக்சர் படேலின் பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். ஹெட் - ஸ்டோனிஸ் கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 87 ரன்களைச் சேர்த்தது. ஹெட் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே பும்ராவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஸ்டோனிஸும் ஆட்டம் இழந்தார். அவர் 63 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்தார். கடைசி கட்டத்தில் வேட் 20, பாக்னர் 12, கோல்டர் நைல் 0 ரன்களில் அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றிபெற 243 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி ஆட வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், அஜிங்க்ய ரஹானேவும் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி விக்கெட்டை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினர். இவர்களின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 11.3 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்டது. அதன் பிறகு இருவரும் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 52 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 64 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரின் நேர்த்தியான ஆட்டத்தால் இந்திய அணி 113 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தது.

இந்தியாவின் தொடக்க ஜோடியைப் பிரிக்க ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடவேண்டி இருந்தது. இறுதியில் 124 ரன்களில் இந்த ஜோடியை கோல்டர் நைல் பிரித்தார். 74 பந்துகளில் 61 ரன்களை எடுத்த ரஹானே, கோல்டர் நைலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார். ரஹானே அவுட் ஆன பிறகு, கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, தனது அதிரடியால் ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து மிரட்டினார். 94 பந்துகளில் 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் தனது சதத்தை எட்டினார். அதன் பிறகும் அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகள் பறந்தன. 109 பந்துகளில் 125 ரன்களைக் குவித்த அவர், சம்பாவின் பந்தில் கோல்டர் நைலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே கோலியின் (39 ரன்கள்) விக்கெட்டையும் சம்பா கைப்பற்றினார். ஆனால் இந்திய அணி வெற்றி இலக்கை நெருங்கி இருந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த விக்கெட்களால் பலனில்லாமல் போனது.

இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலிலும் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது.

Google+ Linkedin Youtube