இறுதிக்கட்டத்தில் அபாரமாக பந்து வீசுவதில் உலகின் சிறந்த பவுலர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா

கான்பூர், 

கான்பூரில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றதுடன் தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் ரோகித் சர்மா (147 ரன்), கேப்டன் விராட் கோலி (113 ரன்) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய நியூசிலாந்து அணியால் 7 விக்கெட்டுக்கு 331 ரன்களே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ரோகித் சர்மா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இறுதிகட்டத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடிய இரண்டு பந்து வீச்சாளர்கள் (புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா) எங்களிடம் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய தொடரில் (4–1 என்ற கணக்கில் வெற்றி) அவர்கள் இருவரும் பந்து வீசிய விதத்தை பார்த்தால், எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏனெனில் ஆஸ்திரேலியா அதிரடியான பேட்டிங் வரிசையை பெற்றிருந்தது. ஆனாலும் இருவரும் அந்த தொடரில் பந்து வீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த ஆட்டத்தில் கூட (நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டி) பனிப்பொழிவின் காரணமாக ஈரப்பதம் ஏற்பட்டு பந்தை சரியாக பிடித்து வீச முடியவில்லை. அது மட்டுமின்றி இங்கு நிலவிய ஆடுகளத்தன்மை மற்றும் சூழலில் கடைசி 4 ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது எளிதான வி‌ஷயமே. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் இருவரும் செம்மையாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்தனர். தற்போது உலகின் இறுதி கட்டத்தில் மிக நேர்த்தியாக பந்து வீசுபவர்கள் இவர்கள் தான்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 280 ரன்கள் எடுத்தும் தோற்றோம். அந்த ஆடுகளத்தில் 280 ரன்களை வைத்து கொண்டு வெற்றி காண்பது ஒரு போதும் சுபலமானது அல்ல. 0–1 என்று பின்தங்கி இருந்தாலும் அடுத்த இரு ஆட்டங்களில் எங்களது திறமையை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம். நெருக்கடிக்கு மத்தியில் எப்படி பந்து வீசுவது என்பது எங்களது பவுலர்களுக்கு தெரியும். இது போன்று பல முறை கடினமான கட்டத்தில் இருந்து எழுச்சி பெற்றிருக்கிறோம். அது தான் இந்திய அணியின் தனித்தன்மையாகும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Google+ Linkedin Youtube