கியாஸ், வெங்காயம், ரேஷன் சீனி விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், 

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், அதை பின்பற்றும் தமிழக அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், ரேஷன் சீனி விலை உயர்வு, ரூ.180 அளவுக்கு உயர்ந்துள்ள வெங்காயம், ரூ.850 வரையில் உயர்ந்துள்ள சமையல் கியாஸ் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் நகரக்குழு சார்பில் வேப்பமூடு பூங்கா அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நகரக்குழு உறுப்பினர்கள் மோகன், அஸிஸ், மீனாட்சி சுந்தரம், பரமசிவம், கலா, கவிதா, ஐவின், சோபன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.

இந்த போராட்டத்தில் சமையல் கியாஸ், வெங்காயம், ரேஷன் சீனி விலை உயர்வை வெளிப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தின் முன்புறத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒரு கூடையில் வெங்காயம் மற்றும் சீனி பாக்கெட் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தது. பலர் கோரிக்கைகள் அடங்கிய அட்டையையும், கட்சிக் கொடியையும் கையில் பிடித்திருந்தனர்.

இதில் பங்கேற்றவர்களில் ஒருவர் சீனி பாக்கெட்டுகளால் ஆன மாலையை அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார். 

Google+LinkedinYoutube