பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ரவிகுமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் குடும்ப கோவிலுக்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தனர். அப்போது, அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

நகை-பணம் கொள்ளை

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்து 500 பணம் ஆகியவை திருட்டுபோய் இருந்தது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சாம்சன் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகிறார். 

Google+LinkedinYoutube