மார்த்தாண்டம் மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் மத்திய அரசுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை

நாகர்கோவில்,

மார்த்தாண்டம்–குழித்துறை இடையே ரூ.129 கோடியில் அமைக்கப்படும் மேம்பாலப்பணி கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 24 மாதங்களுக்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சுமார் 20 மாதங்களாக நடைபெறும் பாலப்பணியில் 20 சதவீத பணிகள் கூட முடியவில்லை. மார்த்தாண்டம் குமரி மாவட்டத்தின் 2–வது பெரிய நகரம். இன்னும் 1½ மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் வர இருக்கின்றன. ஆனால் 2 ஆண்டுகளாக நடைபெறும் பாலப்பணியால் மார்த்தாண்டம்–குழித்துறை சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழில் வர்த்தகம் அடியோடு முடங்கியுள்ளது.

குழித்துறை–மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மார்த்தாண்டம் புறவழி சாலைகளான குழித்துறை, மேல்புறம், ஞாறான்விளை, திக்குறிச்சி, பயணம், உண்ணாமலைக்கடை, சிறாயன்குழி, இரவிபுதூர்கடை, பள்ளியாடி, மாமூட்டுக்கடை, விரிகோடு, மார்த்தாண்டம் ரோடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், சாலைகள் உடைந்தும், பெயர்ந்தும் உள்ளன. எனவே சாலைகளை அகலப்படுத்தி, சீரமைக்க வேண்டும்.

இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம், குழித்துறை தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் மார்த்தாண்டத்தை சுற்றி உள்ள மாநில, மாவட்ட சாலைகளில் காலை நேரத்தில் பெரும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, மார்த்தாண்டம் மேம்பாலப்பணியை விரைந்து முடிக்கவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube