அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி

வாஷிங்டன்,

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் 2018–ம் ஆண்டில் ராணுவத்துக்கு 700 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குவதற்கான தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்ட மசோதா–2018 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.45½ லட்சம் கோடி ஆகும்.

இந்த தொகை டிரம்ப், முதலில் கேட்ட தொகையை விட 26 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் கோடி) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா முதலில் பாராளுமன்ற செனட் சபையில் (மேல்சபையில்) கடந்த வியாழக்கிழமை நிறைவேறியது. நேற்று பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 356 ஓட்டுகளும், எதிராக 70 ஓட்டுகளும் விழுந்தன.

Google+LinkedinYoutube