பத்மாவதி படவிவகாரம் : தீபிகா படுகோனே தலைக்கு ரூ. 5 கோடி அறிவிப்பு

மும்பை

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜனதா இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘பத்மாவதி’ படத்தை திரையிட தடை விதிக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.  பா.ஜ.க எம்.பி. மற்றும் பல இந்து குழுக்கள்  இந்த படம் பத்மினியைப் பற்றிய வரலாற்றை திசைதிருப்புவதாக புகார் கூறி வருகின்றனர்., 

படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 படம் வெளியாகும் நாளன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர். படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்தநிலையில் பத்மாவதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ராஜஸ்தான் கோதா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் நடந்தது. அந்த தியேட்டரின் முன்னால் ‘ராஜ்பத்கானி சேனா’ அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தியேட்டர் மீது கற்களை வீசினார்கள். டிக்கெட் கவுண்டர்களும் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் டிரெய்லர் வெளியீட்டு விழா பாதியில் நிறுத்தப்பட்டது. போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினார்கள்.

பத்மாவதி படத்துக்கு வக்காலத்து வாங்கும், நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டுவோம் என ஒரு அமைப்பும், அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு அளிப்போம் என மற்றொரு அமைப்பும் மிரட்டல் விடுத்து உள்ளது.

சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் வெட்டியது போல், நாங்கள், தீபிகாவின் மூக்கை வெட்டுவோம் என அந்த அமைப்பின் ராஜஸ்தான் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். படம் வெளியாகும் அன்று, நாடு தழுவியளவில், பந்த் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேப்போன்று உ.பி.,யை சேர்ந்த சாத்ரிய சமோஜ் அமைப்பு, தீபிகா உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால், அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படும்,

 இயக்குநரும் இந்த படத்தை வெளியிடும் முயற்சியை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தீபிகாவின் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. 

Google+LinkedinYoutube