நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய
புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் புத்தக கண்காட்சியை 4-வது புத்தக
திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இதையொட்டி அங்கு பல்வேறு பதிப்பகங்களின்
சார்பில் 127 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சித்த மருத்துவ கல்லூரி
சார்பில் மூலிகை கண்காட்சியும், மகளிர் சுயஉதவிக்குழு பொருட்கள் விற்பனை
அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர்
முத்துராமலிங்கம் வரவேற்றார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ‘ரிப்பன்‘ வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் குத்துவிளக்கு ஏற்றி புத்தக திருவிழாவை தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு
புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்
இந்த புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான
குழந்தைகள் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கில வழிக்கல்வி
கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். இதனால் அவர்கள் தமிழை
கஷ்டப்பட்டு தான் படிக்கிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை,
தமிழ் புத்தகங்களை படிக்க சொல்லி தரவேண்டும். தமிழில் தவறு இல்லாமல்
எழுதவும், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் சொல்லிக் கொடுக்க
வேண்டும். தங்களுடைய குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வந்து
அவர்களுக்கு தேவையான புத்தகத்தை வாங்கி கொடுத்து அதை படிக்க சொல்ல
வேண்டும். புத்தகங்கள் படிப்பதால் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். புத்தகம்
நல்ல நண்பன், எனவே வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம்
ஒவ்வொரு ஆண்டும் 10 எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வெகுமதி
வழங்கி வருகிறோம். அதேபோல் இங்கு எழுத்தாளர்கள் இருந்தால் நீங்களும்
விண்ணப்பிக்கலாம். உங்களுக்கும் வெகுமதி கிடைக்கும்.
விழாவில்
நெல்லை பயிற்சி உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், அ.தி.மு.க. மாநகர்
மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்,
அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு,
எஸ்.கே.எம்.சிவகுமார், பகுதி செயலாளர் ஜெனி, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன்,
தாசில்தார் ராஜேசுவரி, நூலக அலுவலர் வயலட், நூலக ஆய்வாளர் முத்துகிருஷ்ணன்,
தமிழ் பண்பாட்டு மைய நிர்வாகி ரமேஷ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம் நன்றி கூறினார்.
புத்தக
திருவிழாவையொட்டி தினமும் 24 மணி நேரமும் கல்லூரி மாணவ-மாணவிகள் சுழற்சி
முறையில் புத்தகம் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து
மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், சாகித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
புத்தக
கண்காட்சி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல்
இரவு 10 மணி வரை இந்த புத்தக கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி
மாணவ-மாணவிகள் பார்வையிட்டு, புத்தகங்கள் வாங்கி செல்லலாம். தினமும்
மாலையில் கலைநிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களின்
சொற்பொழிவு நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை
மாணவ-மாணவிகளின் கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெறும்.
இதில் பங்கேற்கின்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
கண்காட்சியில்
பல பதிப்பகங்களின் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த
எழுத்தாளர்களின் படைப்புகள், கலை, கல்வி, வரலாறு, அறிவியல், ஆன்மிகம்,
சமையல், ஜோதிடம், அரசியல், மருத்துவம், போட்டித்தேர்வுகள் என பல
தலைப்புகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை
செய்யப்படுகின்றன.
News Comments