கேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று; தமிழக மீனவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க முடியாது: பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் கரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நம்மை பெரிதும் கவலை கொள்ள வைக்கிறது. பீதியையும் ஏற்படுத்துகிறது. இன்று மட்டும் 608 பேருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் தான் மிக அதிகமாக 201 பேருக்கு நோய் பரவியுள்ளது.

நோய் பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொடுகிறது என்பது தான் இதன் அர்த்தம் ஆகும். இன்று கரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஆலப்புழா மாவட்டம் சுனக்கரை பகுதியை சேர்ந்த 47 வயதான நசீர் உஸ்மான் குட்டி என்பவர் மரணமடைந்துள்ளார்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 68 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 396 பேருக்கு நோய் பரவி உள்ளது. சுகாதாரத் துறையை சேர்ந்த 8 பேருக்கும், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவருக்கும், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேருக்கும், மத்திய தொழிற் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேருக்கும் இன்று நோய் பரவி உள்ளது.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியவர்களில் 26 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது என தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 70 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 58 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 44 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 42 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 34 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 26 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 25 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 23 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 12 பேர் வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,227 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,81,847 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 4,780 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். கேரளாவில் இதுவரை 8,930 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 720 பேர் நோய் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 4,454 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,35,043 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 7,745 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 79,723 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 75,338 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. கேரளாவில் தற்போது 227 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுக்கு உதவ அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று நோய் பாதிக்கப்பட்ட 201 பேரில் 158 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. பூந்துறை, கோட்டக்கல் மற்றும் வெங்கானூர் பகுதிகளில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இம்மாவட்டத்தில் 4 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நோய் பரவியுள்ளது.

திருவனந்தபுரத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களில் 19 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது என்று தெரியவில்லை. இதுவரை ஆலப்புழா மாவட்டத்தில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 130 பேருக்கு நோய் பரவியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை பொது இடங்களில் வீசக்கூடாது. இது நோய் பரவ காரணமாக அமையும். கேரளா நோய் பரவலில் தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது.

திருவனந்தபுரம், மலப்புரம் உட்பட சில மாவட்டங்களில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. சமூக பரவல் இதன் அடுத்த கட்டமாகும். இதை நாம் தடுத்தே ஆகவேண்டும். எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேரளாவில் இதற்கு முன் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. அதை ஒரு மாதத்தில் அதை நாம் கட்டுப்படுத்தினோம். ஆனால் தற்போது கரோனா நோய் பரவத் தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த வருட இறுதியில் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் பரவல் தடுப்பு பணிகள் நீண்டு கொண்டே செல்வதால் சுகாதாரத்துறை ஊழியர்கள் களைப்படைந்து வருகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.

கேரளாவில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. கடந்த மார்ச் 10ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின. ஆனால் கரோனா பரவல் காரணமாக 19ஆம் தேதியுடன் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மே 26-ஆம் தேதி சிலரின் எதிர்ப்புக்கிடையே மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து மீனவர்களை கேரளாவுக்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Google+ Linkedin Youtube