தனியார் நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு கடன் மறுப்பு-டெல்டா விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரு முதலாளிகளிடம் காட்டப்படும் பெருந்தன்மையை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் காட்ட தவறிவிட்டதாக விவசாயிகள் விமர்சிக்கின்றனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜுலை 17-ஆம் தேதியன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கடனுக்கான வட்டியை செலுத்தினால்தான் புதிய கடனை அளிக்கமுடியும் என்ற விதி இருப்பதால், சிக்கல் நீடிப்பதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


பிபிசி தமிழிடம் பேசிய விவசாயிகள், மத்திய மாநில அரசுகள் தொழில்துறை நிறுவங்களிடம் காட்டும் அக்கறையை வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளிடம் காட்டவேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பகுதியைச்சேர்ந்த விவசாயி செந்தில் பேசும்போது, தனது மூன்று ஏக்கர் நிலத்தில் குறுவை நெல் பயிருக்காக கூட்டுறவு வங்கியை அணுகியபோது ஏமாற்றம் அளிக்கும் பதில்கள் மட்டுமே கிடைத்ததாக கூறினார்.

''2017ம் ஆண்டு ரூ.90,000 கடன் பெற்றிருந்தேன். அதற்காக வட்டி செலுத்த முடியவில்லை. அந்த கடனில் பாதியை செலுத்தி அடுத்த விளைச்சலுக்காக மற்றொரு கடன் பெற்றேன். 2018ல் கஜா புயல் என் நம்பிக்கையை சீர்குலைத்தது.

அதில் இருந்து நான் மீண்டு வரவில்லை. தற்போது கொரோனா காலத்தில் எந்த வேலை செய்வதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. ஊரடங்கு காலத்தில் சந்தித்த நஷ்டத்தால் தற்போது கடனை செலுத்தவில்லை என்பதால் புதிய கடன் தர மறுக்கிறார்கள்.கஜா புயலை தொடர்ந்து கொரோனா எங்களை வாட்டுகிறது,''என்கிறார் செந்தில்

வட்டியோடு சேர்த்து இரண்டு லட்சம் கடனை திருப்பி செலுத்தமுடியாமல் தவிப்பதாகக் கூறும் செந்தில், பேரிடர் காலங்களில் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களில் சலுகை கொடுத்தால் மட்டுமே தன்னை போன்ற சிறு விவசாயிகளால் பிழைக்கமுடியும் என்கிறார்.


பெரு முதலாளிகளுக்கு பல விதமான சலுகைகளை அளிக்க முன்வரும் அரசுகள், விவசாயிகளின் நலனுக்காக கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை விடுதலை செய்யவேண்டும் என்கிறார் என்கிறார் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம்.

''இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கினர். அந்த மகிழ்ச்சியில் மண்அள்ளி போடும் வகையில் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தர மறுத்துவருகின்றனர்.

கடந்த காலத்தில் வாங்கிய கடனை கட்டவில்லை என்றும் கூடுதல் கடன் விவசாயிகள் பெயரில் இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி கடன் தர மறுக்கின்றனர். இதனால் தண்ணீர் திறக்கப்பட்டும் வேளாண்மைப் பணிகளை தொடர முடியாமல் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். அதிலும் நகைக்கடன் அனுமதி வழங்கும் அதிகாரம் இப்போது மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பதால் அதுவும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லாமல் இருக்கிறது,'' என்றும் சண்முகம் கூறுகிறார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகைகள் மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் பகுதியளவு விவசாயிகளுக்கு அளித்தால் கூட விவசாயிகளுக்கு 2020 பொற்காலமாக இருக்கும் என்கிறார் அவர். பேரிடர் காலங்களில் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் வரிச் சலுகைகளை குறைத்து, விவசாயிகளுக்கு உதவவேண்டும் என்கிறார் அவர்.

தமிழக கூட்டுறவு வங்க ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.தமிழரசு பேசுகையில், தமிழகத்தில் உள்ள 4,250 தொடக்க வேளாண்மை சங்கம் மட்டுமல்லாது, அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நகைக் கடன் வழங்குவதை நிறுத்திவைக்கவேண்டும் என குறுந்தகவல் மூலமாக ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் புதிய கடன் கொடுப்பது ஏன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். பிபிசிதமிழிடம் பேசிய உயரதிகாரி ஒருவர், ''தமிழகத்தில் கொரோனா காலத்தில் 50,000 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளித்துள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களில் நகைக் கடன் மட்டும் ரூ.200 கோடி அளித்துள்ளோம். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.11,000கோடி கடன் தரவேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். குறுவை பயிருக்கு மட்டும் டெல்டா மாவட்டங்களில் ரூ,1,000 கோடி இதுவரை அளித்துள்ளோம். கடன் தருவதில் சிக்கல் இல்லை. ஏற்கனவே கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்குக் கடன் அளிக்கமுடியாது,''என்கிறார்.

மேலும் அவர், ''பழைய கடன், அதன் வட்டி எதையும் செலுத்தாத நேரத்தில், அதே விவசாயிக்கு புதிய கடன் கொடுக்க முடியாது. இது விதிமீறல் ஆகிவிடும் என்பதால் மறுத்திருப்பார்கள். ஆனால் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு எந்த சிக்கலும் இல்லை,''என்கிறார் அவர்.

Google+ Linkedin Youtube