இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் திறன் உண்டு: இந்திய மருந்துத் துறைக்கு பில்கேட்ஸ் புகழாரம்

இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து கொடுக்கும் திறன் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உண்டு என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவிட்-19: வைரஸை எதிர்த்து 'இந்தியாவின் போர்' என்ற தலைப்பில் குறும்படம் ஒன்று டிஸ்கவரி பிளஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மருந்து நிறுவனங்களைப் புகழ்ந்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:

''கரோனா வைரஸால் இந்தியா மிகப்பெரிய சவால்களைக் குறிப்பாக மக்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்தும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஏனென்றால், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்கள், மக்கள் அடர்த்தி, நகர்ப்புற மையங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தியாவிடம் ஏராளமான வளங்களும், செயல்திறன்களும் பொதிந்து கிடக்கின்றன. அந்நாட்டில் உள்ள மருந்து நிறுவனங்கள் உலகிற்கே தடுப்பு மருந்துகளையும், மருந்துகளையும் சப்ளை செய்யும் திறன் பெற்றவை. உலகிலேயே அதிகமான தடுப்பூசிகள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக சீரம் நிறுவனம்தான் மிகப்பெரியது.

ஆனால், பயோ இ, பாரத் பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இப்போது வந்துள்ளன. கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இது மட்டுமல்லாமல் மற்ற பல நோய்களுக்கும் மருந்துகளை இவர்களால் கண்டுபிடிக்க முடியும்.

இந்திய மருந்து நிறுவனங்களைப் பார்த்து நான் மிகவும் வியக்கிறேன். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வழங்கும் திறன் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உண்டு.

நாம் கரோனா வைரஸில் இருந்து இறப்பு வீதத்தைக் குறைக்க உடலில் நோய் எதிரப்புச் சக்தி அவசியம், அப்போதுதான் நாம் இந்த வைரஸை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

பில் அன்ட் மிலண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்திய அரசுடன் இணைந்து உயிரி தொழில்நுட்பத்துறையில் செயல்பட்டு வருகிறது. ஐசிஎம்ஆர் மற்றும் இந்திய அறிவியல் ஆலோசகர் ஆகியோர் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமான நகரங்கள் இருப்பதால் அங்கிருந்து மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால்தான் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை எவ்வாறு குறைப்பது என்று பார்க்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும், சுகாதார விஷயங்களிலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கரோனாவிலும் நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து பயணிப்போம்.

குறிப்பாக பிஹார், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த காலங்களில் மக்களுக்காகப் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறோம். பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறையில் எங்கள் அமைப்பு இணைந்து செயலாற்றி, ஆன்லைன் பயிற்சிகள் அளித்துள்ளது. இப்போது கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து வருகிறோம்’’.

இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube