கரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிய சமுதாய பங்கேற்பு: மத்திய அமைச்சர்கள் குழு முடிவு

நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.

கோவிட் -19 குறித்த மத்திய அமைச்சர்கள் குழுவின் 19-வது கூட்டம், புது டெல்லியில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைக்சசர் எஸ்.ஜெய்சங்கர், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கப்பல் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரசாயணம், உரங்கள் துறை இணையமைச்சர் மன்சுக் லால் மண்டாவியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு குறித்த தற்போதைய நிலவரம், மத்திய அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. தினசரி தொற்றுப் பாதிப்பு, உலகின் 10 முன்னணி நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் இறப்பு வீதம் குறித்த உலகளாவிய ஒப்பீடு குறித்து, தேசிய நோய்த் தடுப்பு மைய இயக்குநர் டாக்டர் சுஜீத் கே. சிங் விவரித்தார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த குணமடைவோர் வீதம் 64.54 சதவீதம் ஆக உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் தான் அதிகபட்சமாக, 89.08 சதவீதம் குணமடைந்துள்ளனர், அதற்கு அடுத்தபடியாக ஹரியாணா (79.82%) உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தான் மிகக் குறைந்த அளவாக 39.36 சதவீதம் மட்டும் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர்கள் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள நகரங்கள் / கிராமப்புறங்களில், பகுதிவாரியாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிகிச்சை பெறுவோர் உள்ளிட்ட விவரம் குறித்தும் அமைச்சர்கள் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது. தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ள 12 மாநிலங்களின் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், தெலங்கானா, பிஹார், ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம்) தொற்று அதிகரிப்பு வீதம்; பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் வீதம்; மற்றும் சிகிச்சை பெறுவோர் மற்றும் இறப்பு வீதம் அதிகம் உள்ள 20 மாவட்டங்கள் மற்றும் இந்த மாவட்டங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்த விவரத்தை, தேசிய நோய்த் தடுப்பு மைய இயக்குநர், அமைச்சர்கள் குழுவினருக்கு விவரித்தார்.

நோய்த் தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ள மாவட்டங்கள் / நகரங்களில் இறப்பு வீதத்தைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்த அவர், புனே, தானே, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறினார். கண்காணிப்பைக் கடுமையாக்குவதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் பாதிப்பு நிலவரத்தைத் திறம்படக் கையாளுதல்; ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை அளவை அதிகரித்தல்; வீடு, வீடாகச் சென்று தொற்று பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிவதைத் தீவிரப்படுத்துதல்; நோய்த் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவோர்/ பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை அதிகரித்தல், தொற்று பாதிப்பு உடையவர்களை கண்காணிப்பதற்கான நிலையான நடைமுறைகளுடன் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மற்றும் திட்டமிட்ட

ரத்தப் பரிசோதனைகள் மூலம், உண்மையான பாதிப்புகளைக் கண்டறிதல் போன்றவற்றுக்கான செயல்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டது. திட்டமிட்ட தகவல் அளித்தல், கற்பித்தல் மற்றும் தொடர்பு கொள்ளுதல் பிரச்சாரம் மூலம் மக்களின் உணர்வுகளை அறிந்து, சமுதாய பங்கேற்புடன் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

நோய் பாதிப்பு மிதமாக உள்ள மாவட்டங்கள் / நகரங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுததல்; உள்ளூரில் பரவுவதைக் கட்டுப்படுத்துவது; தொற்று பாதிப்பை இயன்றவரை வெகுசீக்கிரமாக அடையாளம் காணுதல்; தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சமுதாய பங்கேற்பு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Google+ Linkedin Youtube