எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையில்

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஹை-டெக்’ லேப் மூலம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் லேப்டாப்பில் அனைத்துவிதமான பாடப்பிரிவுகளையும் பதிவிறக்கம் செய்து படிப்பதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் சிறந்த முறையில் கல்வியை கற்பதற்கு இதுபோன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.


மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிற தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை குறித்து சிறப்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் புதிய தேசிய கல்விக்கொள்கையில் இருக்கும் சிலவற்றை ஆராய நிபுணர் குழுவும் அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் யார்? யாரை தேர்வு செய்வது என்பதை முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். குழு அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தான் தேசிய கல்விக்கொள்கை குறித்து அரசு முடிவு எடுக்கும். மத்திய அரசு இதற்கென்று கால அவகாசம் எதுவும் தரவில்லை. எனவே மாநில அரசு ஆராய்ந்து, சிந்தித்து முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு புதிய கல்விக்கொள்கையில் பொதுத்தேர்வு இருப்பதாக தெரியவருகிறது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்து வாபஸ் பெற்று இருக்கிறோம். அதேநிலைதான் தொடரும்.

கேள்வி:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எதன் அடிப்படையில் வெளியிடப்பட உள்ளது?

பதில்:- எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. மிக விரைவில் தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கேள்வி:- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்?

பதில்:- வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் அதைபற்றி அறிவிப்பார்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ரத்து செய்யப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு ‘கிரேடு’ முறையில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அரசு அறிவித்தபடி, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் (80 சதவீதம்) மற்றும் வருகைப்பதிவு (20 சதவீதம்) அடிப்படையில் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளதாக இந்த அறிவிப்பின் மூலம் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

Google+ Linkedin Youtube