அயோத்தியில் இன்று பூமி பூஜை: 1.25 லட்சம் லட்டு வழங்குகிறது மஹாவீர் கோயில் அறக்கட்டளை

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு இன்று 1.25 லட்சம் லட்டுகளை வழங்க மஹாவீர் கோயில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவை முன்னிட்டு 1.25 லட்சம் லட்டுகளை வழங்க உள்ளதாக பிஹாரின் பாட்னாவைச் சேர்ந்த மஹாவீர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹாவீர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறும்போது, “அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு ‘ரகுபதி லட்டு’ என்ற பெயரில் 1.25 லட்சம் லட்டுகள் வழங்கப்படும். இதில் 51 ஆயிரம் லட்டுகள் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

மற்ற லட்டுகள் பிஹாரின் சீதாமர்ஹியில் உள்ள கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு 25 புனித தலங்கள் உள்ளன. பிஹாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமர் மற்றும் ஹனுமன் பக்தர்களுக்கும் லட்டு வழங்கப்படும். ராமர் கோயில் கட்ட மஹாவீர் அறக்கட்டளை சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும். முதல்கட்டமாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Google+ Linkedin Youtube