50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்?

சீன நிறுவனமான டிக் டாக்கின் அமெரிக்க வியாபாரம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதன் செயல்பாட்டையும் வாங்கி கையகப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று வருகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின், சீன நிறுவனமான டிக் டாக், ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 47 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலியைத் தடை செய்யும் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் டிக் டாக் செயலியைத் தடை செய்யும் திட்டம் இருப்பதாகப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்கலாம் எனச் செய்திகள் வந்தன. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என டிக் டாக்கின் சர்வதேச சந்தையை மனதில் வைத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மொத்தமாக அந்நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இதற்குச் செலவாகலாம் என்று கூறப்படுகிறது.

"சீனாவின் வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பின் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மைக்ரோசாஃப்ட் (ஒரு காலத்தில்) பயிற்சி அளித்துள்ளது. இதனால்தான், டிக் டாக் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படவில்லை என்றால் தடை செய்யப்படும் என்று கூறிய அதிபர் ட்ரம்ப்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ழாங் யிமிங் மைக்ரோசாப்ஃடை அணுகியுள்ளார்" என்று ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் பீஜின் பிரிவுத் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், டிக் டாக்கை அமெரிக்க நிறுவனம் வாங்கும்பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மைக்ரோசாஃப்ட் - டிக் டாக் இடையேயான பேச்சுவார்த்தை குறித்து ஒரு முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை இந்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை என்றால் டிக் டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் டிக் டாக் பயனர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 கோடி. மேலும் ஜனவரி மாதம் 500 ஊழியர்களுடன் செயல்பட்டு வந்த டிக் டாக்கில் தற்போது 1,400 ஊழியர்கள் வேலை செய்யும் அளவு அந்நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube