ஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'?

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'பிஸ்கோத்' படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிஸ்கோத்'. கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. முழுக்க காமெடி பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார் சந்தானம். இதில் ஒரு கெட்டப்பில், முழுக்கவே 'பாகுபலி' படத்தைக் கலாய்த்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலையை இழுக்கும் காட்சி, கட்டப்பாவின் தலை மீது பாகுபலி காலை வைக்கும் காட்சி என அனைத்தையுமே கலாய்த்திருக்கிறார்கள். இதில் கட்டப்பா கெட்டப்பில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடித்துள்ளார்.

தற்போது, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைத் தயாரிப்பாளர் ரவீந்திரன் கைப்பற்றியுள்ளார். திரையரங்குகள் திறக்க நாட்களாகும் என்பதால், ஓடிடி தளங்களில் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ரவீந்திரன் நினைக்கும் தொகையை, ஏதேனும் ஓடிடி தளம் கொடுக்க முன்வரும் போது 'பிஸ்கோத்' படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Google+ Linkedin Youtube