2 நாட்களில் 10 அடி உயர்வு: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுங்கள்: தமிழக அரசிடம் கேரள அரசு வேண்டுகோள்

இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் மிகக் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிவிட்டதால், படிப்படியாக தண்ணீரை சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு வெளியேற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய இடுக்கி அணை மட்டும் நிரம்பவில்லை.

ஆனால், இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மிகக்கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 142 அடிவரை தண்ணீர் தேக்க முடியும் என்ற நிலையில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையால் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 136அடியை எட்டியுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கையை இடுக்கி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்.

அதேசமயம், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கும், விவசாயப் பணிகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 1650கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 8,143 கன அடி நீர் நண்பகல் 2 மணி நிலவரப்படி வந்து கொண்டுருந்தது.

இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டும் மிகவேகமாக அதன் கொள்ளளவை எட்டும் நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மழையின் போது முல்லைப்பெரியாறு அணை நிரம்பும் தருவாயில் திறக்கப்பட்டபோது இடுக்கிமாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

அதுபோன்ற நிலை இப்போதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக படிப்படியாக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் அளவை அதிகப்படுத்தி தேனிமாவட்டம் வைகை அணைக்கு திறக்கக் கோரி கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசின் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா, தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் “ கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மழையின் தீவரம் அதிகமாக இருக்கிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் வேகம் அதிகரி்த்து இருப்பதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த 3-ம் தேதி 112 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 7-ம் தேதி 131.25 அடியை எட்டிவிட்டது.
அடுத்த (சனி,ஞாயிறு)இரு நாட்களுக்கு இடுக்கி மாவட்டத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 13,257 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது, சுரங்கப்பாதை வழியாக 1,650 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் முல்லைப்பெரியாறு பகுதியில் 19.8 செ.மீ மழையும், தேக்கடியில் 15.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 7 அடி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கட்டப்பணை பொதுப்பணித்துறை பொறியாளர் அளித்த தகவலின்படி, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரியாறு அணையில் இருந்து 1,22,000 கனஅடி நீர் திறக்க முடியும். கடந்த 2018ம் ஆண்டில் 23 ஆயிரம் கனடி வினாடிக்கு திறந்தபோது, பெரும் சேதம் கேரளப்பகுதியில் ஏற்பட்டது.

ஆதலால் இப்போது இருந்தே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு தண்ணீரை படிப்படியாக வெளியேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.அதுமட்டுமல்லாமல் கேரளப் பகுதிக்குள் நீரைத் திறக்கும் முன் 24 மணிநேரத்துக்கு முன்பாக அறிவிப்புச் செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஹெச். தினேஷன் கூறுகையில், “ தேனிமாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு பேசி, பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் 24 மணிநேரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டேன். இடுக்கி மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 2 மணிநேரமாவது மக்களை வெளியேற்ற நேரம் தேவை. அடுத்த இரு நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்பதால் பெரியாறு அணையின் நீர்மட்டும் மேலும் உயரக்கூடும்” எனத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube