இசை தான் என் இயல்பு; என் வாழ்க்கையின் ஒரு அங்கம்: ஸ்ருதிஹாசன்

இசை தான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசனுக்கு எப்போதுமே இசையில் ஆர்வம் அதிகம்.

இந்த கரோனா ஊரடங்கு காலத்தைப் பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அவரது ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகியுள்ள அவரது ஆல்பத்தில் அங்கமாக உள்ள பாடல் தான் இது.

'எட்ஜ்' பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஸ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இசை மற்றும் திரைப்பட வாழ்க்கை இரண்டிலுமே பணிபுரிந்து வரும் ஸ்ருதிஹாசன் இது குறித்து கூறியிருப்பதாவது:

"இசை தான் எனது இயல்பு. இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 'எட்ஜ்' உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாகப் புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது"

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’-ல் பாடல் எழுதிப் பாடியது மட்டுமன்றி, இப்பாடலைப் பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவையும் ஸ்ருதி ஹாசன் ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube