ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது அயோத்தி நகர வளர்ச்சி குழுமம்: ரூ.2.11 கோடி கட்டணம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை அறக்கட்டளைக்கு அயோத்தி நகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான கட்டணமாக 2.11 கோடி ரூபாயை அறக்கட்டளை செலுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த மாதம் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும், 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முதல்கட்டமாக கோயில் கட்டுவதற்கு அயோத்தி நகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விண்ணப்பித்து இருந்தது.

இதற்கான கட்டணமாக 2.11 கோடி ரூபாயை அறக்கட்டளை செலுத்தியது. இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி அனுமதியை அறக்கட்டளைக்கு அயோத்தி நகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அனுமதி வரைப்படமும் அறக்கட்டளையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

Google+ Linkedin Youtube