இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா தொற்று

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன. மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படுபாதக செயல்களை அரங்கேற்றி வரும் கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 802-பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 04ஆயிரத்து 614 ஆக உயர்ந்தது. இது மத்திய-மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,016 ஆகும். இதன் மூலம் மொத்த சாவு எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.

தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 82 ஆயிரத்து 542-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 32 லட்சத்து 50 ஆயிரத்து 429 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 71,462 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google+ Linkedin Youtube