அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் மீட்பு

40 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஐம்பொன் சிலைகள் லண்டனில் உள்ள கலைப் பொருள் டீலரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை தாலுக்கா அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்த ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் (ஐம்பொன்) ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் 1978-ல் திருடுபோயின. அப்போது இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு குற்றவாளிகள் சிலர் கைதும் செய்யப்பட்டனர். சிலைகளை மீட்காமலேயே வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 4 வருடங்களுக்கு முன்னதாக, லண்டனில் உள்ள கலைப்பொருள் டீலர்கள் அசோசியேஷன் வெப்சைட்டில் இந்த சிலைகளில் ஒன்றின் படம் இருந்திருக்கிறது. லண்டனைச் சேர்ந்த தனியார் கலைப்பொருள் டீலர் ஒருவர் விற்பனைக்காக இந்த சிலையை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்திருந்திருக்கிறார்.

இந்த விவரம், வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் மற்றும்கலைப்பொருட்களை மீட்டு வருவதற்கு தொல்லியல் துறைக்கும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்குக்கும் உதவி வரும் ‘தி இந்தியா ப்ரைடு ப்ராஜெக்ட்’ அமைப்பினருக்குத் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்தியா ப்ரைடு ப்ராஜெக்ட்’ அமைப்பின் இணை நிறுவனர் விஜய்குமார் கூறியதாவது: அந்த சிலையானது விஜயநகர பேரரசு காலத்து சிலை என்பதும், அதனுடன் சேர்ந்த மேலும் சில சிலைகளும் அந்த டீலரிடம் இருக்கலாம் என சந்தேகப்பட்டோம்.

லண்டனில் உள்ள எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட கலைப் பொருள் வியாபாரியின் மியூசியத்தில் வெப்சைட்டில் உள்ள சிலையைப் போன்று (சிறு மாறுதல்களுடன்) இன்னொரு சிலையும் இருப்பதை படம் எடுத்து அனுப்பினார்கள். அந்தப் படத்தையும் வெப்சைட்டில் இருந்த படத்தையும், புதுச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் (ஐஎஃப்பி) போட்டோ ஆவணக் காப்பகத்தில் உள்ள சுவாமி சிலைகள் படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோம்.

அந்த 2 சிலைகளும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்ததை ஜூன் 15, 1958-ல் போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறது ஐஎஃப்பி. இதன் அடிப்படையில் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யான அபய்குமார் சிங்குக்கு தகவல் தந்தோம்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அனந்தமங்கலம் கோயிலில் இருந்து ராமர், லட்சுமணர், சீதா, அனுமன் ஐம்பொன் சிலைகள் திருடு போயிருப்பதை உறுதிப்படுத்தினர். அதற்கான ஆவணங்களையும் சேகரித்து லண்டனில் உள்ள இந்திய தூதரக செயலாளர் ராகுல் நாங்கரேவுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

நாங்கரே, இதுகுறித்து லண்டன் மெட்ரோபாலிடன் போலீஸுக்குத் தகவல் அனுப்பினார். விசாரணையில், தன்னிடம் ராமர், லட்சுமணர் சிலைகள் மட்டுமல்லாது சீதை சிலையும் இருப்பதையும் ஒப்புக்கொண்ட அந்த டீலர், சிலைகளை ஒப்படைத்து விட்டார். மீட்கப்பட்ட 3 சிலைகளும் நேற்று காணொலி வழியே இந்திய தூதரகத்திடம் ஒப்படைப்பட்டது.

3 வாரங்களில் தமிழகம் வரும்

இதில், ராகுல் நாங்கரே, இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், தமிழக தலைமைச் செயலாளர், ஏடிஜிபியான அபய்குமார் சிங் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். மீட்கப்பட்ட சிலைகள் இன்னும் 3 வாரங்களில் தமிழகம் வந்து சேரும் என்றார். குள.சண்முகசுந்தரம்

Google+ Linkedin Youtube