இளையராஜாவின் ராஜா... ஜி.கே.வெங்கடேஷ்! - ‘தேன் சிந்துதே வானம்’ தந்த இசைமேதை!

’’இளையராஜா தனக்கு குரு இருப்பதாகச் சொல்கிறார். உண்மையில் இளையராஜா சுயம்பு. தானாகவே உருவானவர். தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டவர். இசைக்காக, இறைவனால் அனுப்பப்பட்டவர். எனக்காக அவரும் அவருக்காக நானும் பிறந்திருப்பதாகவே உணருகிறேன்’’ என்று இசை நிகழ்ச்சி ஒன்றில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இளையராஜா தன் வாழ்வில் குரு ஸ்தானத்தில் வைத்தும் வழிகாட்டியாக வைத்தும் போற்றிக்கொண்டிருப்பவர்கள் மூன்று பேர். ஒருவர்... தன்ராஜ் மாஸ்டர். இன்னொருவர் பஞ்சு அருணாசலம். மற்றவர்... ஜி.கே.வெங்கடேஷ்.

ஆந்திரத்தைச் சேர்ந்த ஜி.கேவெங்கடேஷ், அண்ணன் ஜி.கே.வி.பதியை குருவாக ஏற்றுக் கொண்டு வீணை கற்றுக்கொண்டார். இதையடுத்து ஒவ்வொரு வாத்தியங்களும் இவருக்குக் கைவந்த கலையானது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் முதலான இசைமேதைகளின் குழுவில் வீணை வாசிப்பவராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் வந்த இந்த இசையமைப்பாளர்களின் ஏகப்பட்ட பாடங்களில் வீணையின் நாதம் தனித்துத் தெரிந்திருக்கும். அந்த நாதத்துக்கு கர்த்தா ஜி.கே.வெங்கடேஷ்.

முன்னதாக, ஆரம்பக் காலங்களில், பாடகராகத்தான் இசையுலகிற்குள் நுழைந்தார். கர்நாடக மாநிலத்தின் ஆல் இண்டியா ரேடியோவில், இவர் பாடலுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. பின்னர் ஐம்பதுகளின் தொடக்கத்தில், எஸ்.சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அந்த சமயத்தில் இவரைப் போலவே உதவியாளராக இருந்தவர் ஆத்ம நண்பரானார். அவர்... எம்.எஸ்.விஸ்வாதன். கலைவாணர் என்.எஸ்.கே. சொந்தப் படம் தயாரித்தார். அந்தப் படத்தின் பெயர் ‘பணம்’. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த முதல் படம் இது. இதில் உதவியளாராக இவர்களுக்குப் பணிபுரிந்தார் ஜி.கே.வெங்கடேஷ்.

பிறகு அறுபதுகளின் முடிவில் வரிசையாக படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். தமிழை விட கன்னடப் படங்களுக்கு அதிகம் இசையமைத்தார். அதிலும் கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் படங்களுக்கு ஜி.கே.வெங்கடேஷ்தான் பெரும்பாலும் இசை. ராஜ்குமார் படத்துக்கு வெங்கடேஷ் இசையமைக்கிறார் என்றாலே மூன்று விஷயங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாகும். ஒன்று... எல்லாப் பாடல்களும் ஹிட். இரண்டு... ராஜ்குமாரை பாடவைத்துவிடுவார். மூன்று... படத்தில், அட்டகாசமான மெலடி பாடல்கள், அந்த வருடத்தின் ஹிட் பாடலாக அமைந்திருக்கும். இப்படி, கன்னடத்தில் அவர் கொடுத்த ஹிட் பாடல்கள், இன்றைக்கும் அங்கே ஏராளமானவர்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில், ஜி.கே.வெங்கடேஷுக்கு உதவியாளராக இருந்தவரை, அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. கிடாரில் விளையாடும் விரல்களில் லயித்துப் போனார். பின்னாளில், இவர் இசையையே ஆளப்போகிறார் என்றும் இசைக்கே ராஜாவாகத் திகழப்போகிறார் என்றும் கணித்தார். வெங்கடேஷ். அவர் கணிப்பு நிஜமானது. அவரிடம் உதவியாளராக இருந்தவர்... இசைஞானி இளையராஜா.

நம்மூரில், ‘தேன் சிந்துதே வானம்’ பாடலுக்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்தான் என்றாலும் அதில் இளையராஜாவின் பங்கு ஏராளம் என்று ஜி.கே.வெங்கடேஷே கூறியிருக்கிறார். இப்படி எத்தனையோ மெலடிகளை அள்ளி அள்ளிக் கொடுத்த வெங்கடேஷை, தன் சொந்த தயாரிப்பான ‘சிங்கார வேலன்’ படத்தின் ஒரு காட்சியில் நடிக்கவைத்தார் இளையராஜா.

அதேபோல், எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும் சேர்ந்து இசையமைத்த ‘மெல்லத்திறந்தது கதவு’ படத்தில், மோகனின் தந்தையாகவும் நடித்தார்.
எத்தனையோ அருமையான பாடல்களைக் கொடுத்த வி.குமார், விஜயபாஸ்கர் முதலானோரை கண்டுகொள்ளவே இல்லை திரையுலகம். அந்த வரிசையில்... ஜி.கே.வெங்கடேஷ் எனும் மகத்தான இசையமைப்பாளரையும் கவனிக்கத் தவறிவிட்டது தமிழ் சினிமா என்றே சொல்லவேண்டும்.

1927ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்த ஜி.கே.வெங்கடேஷ், 93ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி காலமானார். அவர் இறந்து 22 ஆண்டுகளாகின்றன. இன்று அவருக்குப் பிறந்தநாள். 93வது பிறந்தநாள்.

இன்னும் 7 ஆண்டுகள் இருக்கின்றன ஜி.கே.வெங்கடேஷின் நூற்றாண்டுக்கு. அவரின் புகழ் காலம் கடந்தும் பேசப்படும். அவரின் இசை நூற்றாண்டு கடந்தாலும் பாடப்படும்.

மகத்தான இசைமேதையைப் போற்றுவோம்.

Google+ Linkedin Youtube