யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் லண்டனில் உள்ள ராணா கபூரின் ரூ.127 கோடி சொத்து பறிமுதல்

நிதி மோசடியில் கைதான யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ.127 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்தக் குடியிருப்பை 2017-ல் டூஇட் கிரியேஷன்ஸ் ஜெர்சி லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் ரூ.93 கோடிக்கு வாங்கியுள்ளார். லண்டனில் உள்ள இந்த சொத்தை விற்பதற்கான முயற்சியில் ராணா கபூர் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக பிரபல ரியல் எஸ்டேட் விற்பனை நிறுவனத்தை நியமித்திருப்பது தெரிய வந்ததை அடுத்து அமலாக்கத் துறை சொத்தை கைப்பற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

யெஸ் வங்கி தலைவர் ராணா கபூர் மீது சிபிஐ பண மோசடி குற்றச்சாட்டைப் பதிவு செய்ததை அடுத்து அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. முதல் தகவல் அறிக்கையில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குறுகிய கால கடன் பத்திரங்களில் ராணா கபூர் 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.3,700 கோடி முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் டூஇட் அர்பன் வென்சர்ஸ் நிறுவனத்துக்கு டிஎச்எஃப்எல் கடன் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் ராணா கபூர் மனைவி 100 சதவீத பங்கு வைத்திருக்கும் ஆர்ஏபி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். கபூரின் மகள்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. இதற்குப் பதிலாக ரூ.600 கோடி டிஎச்எஃப்எல் புரொமோட்டர் கபில் வாத்வானுக்கு லஞ்சமாக வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.

சிபிஐ வழக்குப் பதிவு செய்த பிறகு விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத் துறை ராணா கபூர், அவரது மனைவி மகள்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் இதுவரை ரூ.2,011 கோடி மதிப்பிலான சொத்துகளை இணைத்துள்ளது. இதில் ரூ.600 கோடி சொத்து ராணா கபூருக்குச் சொந்தமானது. மீதமுள்ள ரூ.1,411 கோடி மதிப்பிலான சொத்துகள் வாத்வான் சகோதரர்\களுக்குச் சொந்தமானது. மற்றொரு பணமோசடி வழக்கில் ராணா கபூரின் ரூ.307 கோடி சொத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ராணா கபூர், கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்து காவலில் வைத்துள்ளது.

Google+ Linkedin Youtube