''பாலு நீ கேட்கல.. போயிட்ட.. எங்க போன?'' - இளையராஜா உருக்கமாகப் பேசிய வீடியோ

'பாலு நீ கேட்கல.. போயிட்ட.. எங்க போன?'' என்று எஸ்பிபி மறைவு குறித்து இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எஸ்பிபிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இருவரும் இணைந்து பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். எஸ்பிபிக்கு உடல்நிலை மோசமடைந்தபோது, 'பாலு சீக்கிரம் எழுந்து வா' என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இளையராஜா.

இளையராஜா - எஸ்பிபி இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதை அந்த வீடியோ புரியவைத்தது. தற்போது எஸ்பிபி காலமானதைத் தொடர்ந்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். கேட்கல. நீ கேட்கல. போயிட்ட. எங்க போன? கந்தவர்களுக்காகப் பாடுவதற்காகப் போயிட்டியா? இங்க உலகம் ஒரே சூனியமாகப் போச்சு. உலகத்துல ஒன்றுமே எனக்குத் தெரியல. பேசுறதற்குப் பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுன்னே தெரியல" என்று பேசிவிட்டு வார்த்தைகள் வராமல் நீண்ட நேரமாக வீடியோவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

இறுதியில் "எல்லாத் துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதற்கு அளவு இல்ல” என்று பேசி வீடியோவை முடித்துள்ளார்.

Google+ Linkedin Youtube