பிஹார் தேர்தல்; ஜேடியு 122, பாஜக 121 இடங்களில் போட்டி

பிஹாரில் பாஜக – ஐக்கிய ஜனதாதளக் கட்சிகள் இடையே இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டது.

பிஹாரில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(எல்ஜேபி) முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஹாரில் நிதிஷ்குமார், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 4ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இதில் ராம்விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபி கட்சியும் இடம் பெற்றிருந்தது.

இந்த சூழலில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தில் தேர்தல் வரும் 28-ம் தேதியிலிருந்து மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிஹாரில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி நடக்கிறது. முதல் கட்டத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.

அக்டோபர் 1-ம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. வரும் 8-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும் 12-ம் தேதி க வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடும் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிகளை பிரி்த்துக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சூழலில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியான எல்ஜேபி, நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்து விட்டது.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இதய அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரின் மகன் சிராக் பாஸ்வான் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறார்.

சிராக் பாஸ்வானுக்கும், முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையே மறைமுகமான மோதல்கள், அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தன. எல்ஜேபி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சிராக் பாஸ்வான் தலைமையில் நடந்தது.

இதில் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த அனைவரும் போராடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சி நிதிஷ் குமார் தலைமையை ஏற்காத நிலையில் பாஜக – ஐக்கிய ஜனதாதளக் கட்சிகள் இடையே இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளக் கட்சிகள் 122 இடங்களிலும், பாஜக 121 இடங்களிலும் போட்டியிடும். இரு கட்சிகளும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு தங்கள் தொகுதியில் இடங்களை ஒதுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிஹார் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.

Google+ Linkedin Youtube