டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமினிக் திம் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்

ஏ.டி.பி.இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த வீரர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

இந்த நிலையில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை சாம்பியனுமான ஜோகோவிச், 3-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். இருவரும் நீயா-நானா என்று கடுமையாக மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டில் 5-5 என்று வரை சமநிலை நீடித்தது. அதன் பிறகு இந்த செட்டை டொமினிக் திம் தனதாக்கினார். 2-வது செட்டிலும் இதே இழுபறிக்கு மத்தியில் டைபிரேக்கர் வரை போராடி ஜோகோவிச் கைப்பற்றினார்.

கடைசி செட்டிலும் இருவரும் மட்டையை அதிரடியாக சுழட்டி தெறிக்க விட்டனர். இந்த செட்டும் சமன் ஆன பிறகு ஒரு வழியாக டைபிரேக்கரில் டொமினிக் திம், ஜோகோவிச்சின் சவாலுக்கு முடிவு கட்டினார்.2 மணி 54 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் டொமினிக் திம் 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வெளியேற்றி தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். சர்வதேச டென்னிசில் டொமினிக் திம்மின் 300-வது வெற்றி இதுவாகும். அவர் இறுதி ஆட்டத்தில் நடால் அல்லது மெட்விடேவ் ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

Google+ Linkedin Youtube