விவசாயிகள் இன்று ரயில் மறியல்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் அடுத்தகட்டமாக, விவசாயிகள், இன்று ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர். இதனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டில்லி எல்லை பகுதிகளில், 70 நாட்களுக்கும் மேலாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பகல், 12:00 முதல், மாலை, 4:00 மணி வரை, நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவான, 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' அறிவித்துள்ளது. இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின், 20 பிரிவினர், கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் அருண் குமார் கூறியதாவது:
ரயில் மறியல், நான்கு மணி நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், பாதுகாப்பை பலப்படுத்த முடிவு
செய்துள்ளோம்.இம்மாநிலங்களில், ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின், 20 ஆயிரம் பேர் அடங்கிய, 20 பிரிவினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்பில் இருப்பதன் வாயிலாக, உடனடியாக தகவல்கள் பெறுவோம். போராட்டத்தில் பங்கேற்போர், பயணியருக்கு எவ்வித இடையூறும்
ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Google+ Linkedin Youtube