டெல்டா, தென் மாவட்டங்களை குறி வைக்கும் அமமுக

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேச்சையாக ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக, திமுகவை பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றார். அதனால், டிடிவி.தினகரன் மீதும், அவரது கட்சியான அமமுக மீதும் அடுத்தடுத்த தேர்தல்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், அமமுக கேட்டிருந்த ‘குக்கர்’ சின்னம் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் ‘பரிசுப் பெட்டகம்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க போதிய அவகாசம் இல்லாததால் அமமுகவினர் பெரும் ஏமாற்றமும், சோர்வும் அடைந்தனர். ஆனாலும், டிடிவி.தினகரன் பிரச்சாரத்துக்குச் சென்ற இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடியது. அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலில் பெரிய வாக்கு வங்கியையும், வெற்றியையும் பெற முடியவில்லை.

இந்நிலையில் இந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை ஓசையின்றி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அமமுக மண்டல நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் கிளை முதல் மாவட்டம் வரை நிர்வாகிகளை முழுமையாக நியமிக்கவில்லை. மேலும், ‘குக்கர்’ சின்னமும் கிடைக்கவில்லை. இந்த முறை நிர்வாக அமைப்பைப் பல மடங்கு பலப்படுத்தியுள்ளோம். நிர்வாகிகளை முழுமையாக நியமித்துவிட்டோம். ‘குக்கர்’ சின்னமும் கிடைத்துவிட்டது. கடந்த முறை பெரிய வெற்றியைப் பதிவு செய்யாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் கவுரவமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் பலமாக நினைக்கும் டெல்டா மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகள், தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளைக் குறிவைத்து தேர்தல் பணியாற்றுகிறோம். இந்த 2 மண்டலங்களிலும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றவும், பெரும் வாக்கு வங்கியைப் பெறவும் திட்டமிட்டுள்ளோம். அது, அதிமுகவை கைப்பற்ற எங்களுக்கு அடித்தளமாக அமையும். அதற்காக ‘பூத்’வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டோம்.

திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகியவை ஒரு மண்டலமாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றொரு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நிர்வாகிகள் செயல்பாடு, மக்கள் ஆதரவு அமமுகவுக்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிக தொகுதிகளைக் கைப்பற்றவும், பெரும் வாக்கு வங்கியைப் பெறவும் திட்டமிட்டுள்ளோம். அது, அதிமுகவை கைப்பற்ற அடித்தளமாக அமையும் என தெரிவிக்கின்றனர் அமமுகவினர்.

Google+ Linkedin Youtube