உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா - கோவிட்- 19

இந்தியா, அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை உலகம் முழுவதும் விநியோகிப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கோவிட்- 19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துக் கூறியதுடன், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் குறித்துப் பேசிய அவர், “இந்தியா பல்வேறு ஆண்டுகளாக சுற்றுலா தலங்களுக்குப் பெயர் பெற்ற நாடாக விளங்கிய போதிலும், மருத்துவ சுற்றுலாவில் முன்னணி நாடாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

நமது விரிவான மற்றும் வளமான சுகாதார துறையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக, உலகளவில் ஒப்பிடும் அளவிற்கு நம் நாடு உயர்ந்துள்ளது. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் நமது கல்வி முறை, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை உலகம் முழுவதும் விநியோகிக்கிறது.

இதுபோன்ற ஆற்றல்களும், செயல்திறன்களும் மருத்துவ சுற்றுலாவில் முக்கிய நாடாக இந்தியா உருவாவதற்கு காரணியாக அமைந்துள்ளன”, என்று கூறினார்.

Google+ Linkedin Youtube