தேர்தல் அறிவிப்புக்கு முன்பே துணை ராணுவப்படை வருகை

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே முதல் கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப்படையை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போதுள்ள சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் மே மாதம் முடிவடைவதைத் தொடர்ந்து, அந்த மாநிலங்களில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர். தமிழகத்தில் தேர்தல்முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்கூட்டியே 45 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. இவர்கள், வரும் பிப்.25-ம் தேதி தமிழகம் வருகின்றனர். ஒரு கம்பெனியில் 100 முதல் 110 பேர் பணியில் இருப்பார்கள். அந்த வகையில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊர்க்காவல் படை ஏடிஜிபி ராஜீவ்குமார், டிஐஜி நிர்வாகம் செல்வநாகரத்தினம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஐஜி அஞ்சனா சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, முதல்கட்டமாக தமிழகம் வரும் 45 கம்பெனி படையினரை எந்தெந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவது, மேலும் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகள் இருந்தன. இவற்றில்8 ஆயிரத்து 293 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறியப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தேர்தலின்போது 160 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, இம்முறை 200-க்கும் அதிகமான எண்ணிக்கையில் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Google+ Linkedin Youtube