மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர் கடனை போல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனையும் தள்ளுபடி செய்வது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அவை, பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்ட கடன்களை வழங்குகின்றன. அதில், மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்க, ஒரு குழுவில், அதிகபட்சம், 20 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒரு குழுவுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு, 11 சதவீதம் ஆண்டு வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடந்த, 2011 முதல், 2020 டிச., வரை, 4.28 லட்சம் குழுக்களுக்கு, 8,017 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களை தான் பங்கேற்க வைக்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு பணம், புடவை உள்ளிட்ட, பரிசு பொருட்கள் வழங்கப்படுவதுடன், வங்கிகளில், எளிதில் கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால், அவர்களும், அரசியல் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. விவசாயிகளின் ஓட்டுக்களைக் கவர, கூட்டுறவு வங்கிகளில், பயிர் கடன் பெற்ற, 16.43 லட்சம் விவசாயிகளின் நிலுவை தொகையான, 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, முதல்வர் இ.பி.எஸ்., சமீபத்தில் உத்தரவிட்டார். அதேபோல், பெண்களின் ஓட்டுக்களை கவர, கூட்டுறவு வங்கிகளில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனை, தள்ளுபடி செய்வது தொடர்பாக, அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், கூட்டுறவு வங்கிகளில், மகளிர் குழுக்களுக்கு, எவ்வளவு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை, கூட்டுறவு துறை பெற்று வருகிறது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சட்டசபையில், சில தினங்களில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது, கூட்டுறவு வங்கிகளில் வழங்கிய கடன் தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி கேட்டால் பதில் அளிக்கவும்; கடன் விபரங்களை புதுப்பிக்கவும் தகவல் பெறப்படுகிறது. இது, வழக்கமான நிகழ்வு. கடன்களை ரத்து செய்வது தொடர்பாக, அரசு தான் முடிவு எடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Google+ Linkedin Youtube