அதிமுக கூட்டணியில் அமமுக வருமா?

அதிமுக கூட்டணியில் அமமுகவையும் இணைக்க வேண்டும் என்று விரும்பும் பாஜக அதற்காக மறைமுக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, திமுகவை தோற்கடிக்க இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். அதற்கு, திமுகவை அவர் அழைத்ததாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதுதவிர, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது சாத்தியமில்லை என்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்து சசிகலாவும், தினகரனும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரையிலும் எந்த எம்எல்ஏக்களும் தினகரன் பக்கம் செல்லவில்லை. இருப்பினும், திமுகவை தோற்கடிப்பதற்காக, அமமுகவையும் அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் அதற்காக இருதரப்புக்கும் மறை
முக அழுத்தம் தருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் முருகன், சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார். அதன் பிறகு கோவையில், அமமுகவை சேர்ப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில், சசிகலாவை ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸ்-ஐ ஆதரிப்போம் என்றும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எந்த அழுத்தமும் பாஜக தரப்பில் தரப்படவில்லை எனவும் தினகரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், வாக்கு வங்கி அடிப்படையில், அமமுகவை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இருப்பதால்தான் இது போன்ற பேச்சுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அமமுகவினர்தான் இதுபோன்ற கருத்துக்களை வெளியில் பரப்பி வருவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், அமமுகஅதிமுக கூட்டணிக்குள் வருவதால், இருக்கும் வாக்கு வங்கிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதே அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.

Google+ Linkedin Youtube